மதிராஜனின் கவிதைகள்

Wednesday, September 09, 2009

காதலின் அவஸ்தை

இன்றாவது என் காதலை
சொல்லி விடலாமென்று
ஓடோடி வருகிறேன்.

நீ..
எப்பொழுதும் நிற்கும்
அந்த பேருந்து நிறுத்தத்தில்
இன்று நிற்கவில்லை.

என்ன செய்வதென்று புரியாமல்
ஒரு ஆட்டோ பிடித்து
அடுத்த நிறுத்தத்திற்கு
நான் வருவதற்குள்..

வழியிலேயே நீ
நான் வந்த ஆட்டோவை
நிறுத்தி ஏறுகிறாய்!

என்னருகில்
வந்தமர்ந்து கொள்கிறாய்!

ஒரு சின்ன 'ஹாய்'
சொல்லி கொள்கிறோம்.

அடுத்த சில நிமிடங்கள்
மௌனமாய்
கடந்துகொண்டிருக்க..

உன் தலைமுடியில்
ஒன்றிரண்டு பறந்துவந்து
என்முகத்தில் படுகிறது.

அதையெடுத்து
உன் -
காதுமடல்களில் சொருகிக் கொண்டு
என்னைப் பார்க்கிறாய்..

அதற்குள்
ஆட்டோ ஒரு பள்ளத்தில்
ஏறி இறங்க,
நீயும் நானும் கொஞ்சம் குலுங்கி
நேரே அமர்வதற்குள் -

உன் தாவணி
காற்றோடு பறந்து வந்து
என் முகத்தை மூடிக்கொள்கிறது!

நீ
ஆவேசமாக அதை எடுத்து
உன் இடுப்பில் சுற்றிக்கொள்கிறாய்.

திரும்பி
ஒருவரை ஒருவர் பார்க்கிறோம்.

பார்த்துவிட்டு
தலைகுனிந்துகொண்டே
லேசாக புன்முறுவல் செய்கிறாய்.

ஆட்டோ இங்குமங்கும் அசைந்து ஆடி
வேகமாகப் போகிறது.

அந்த அசைவுகளால்
உன் உடம்பும் என் உடம்பும்
அவ்வப்போது உரசிக்கொள்கிறது.
உன் மனசும் என் மனசும்
ஒன்றோடோன்று ஒட்டிக்கொள்கிறது.

நீ திரும்பி என்னை
நேராகப் பார்க்கிறாய்..

நானும் பார்க்கிறேன்;

நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாய்..
நானும் சிரிக்கிறேன்;

ஏதோ கேட்கிறாய்..
நானும் பதில் சொல்கிறேன்;

மீண்டும் எதோ கேட்கிறாய்
மீண்டும் நான் பதில் சொல்கிறேன்;

அப்படியே..நேரம் கடக்க.. கடக்க
தூரம் கடக்க.. கடக்க
நீயும் நானும்
நிறைய கேட்கிறோம்;
நிறைய பேசுகிறோம்;

நம் காதலைத் தவிர!!

Labels:

0 Comments:

Post a Comment

<< Home